இன்று மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்படுகிறார். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் ந
விஜய்


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்படுகிறார். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கடந்த மே மாதம் 27ஆம் தேதி டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருப்பார் எனவும், வெள்ளிக்கிழமை காலை மத்திய அமைச்சர்கள் சிலரை முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P