Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் காலமானார். பாரதிராஜாவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா மறைவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b