ஒப்பந்த ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை - மின்சார வாரியம் எச்சரிக்கை
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணியாளர் அரசு காப்பீட்டு (ESI) தொகையை உரிய முறையில் செலுத்தாத ஒப்பந்ததாரர்களுக்கு மின்சார வாரியம்
ஒப்பந்த ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை - மின்சார வாரியம் எச்சரிக்கை


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணியாளர் அரசு காப்பீட்டு (ESI) தொகையை உரிய முறையில் செலுத்தாத ஒப்பந்ததாரர்களுக்கு மின்சார வாரியம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்வாரியத்தின் சார்பில் ஒப்பந்தப் பணியாளர்களுக்காக வழங்கப்படும் PF மற்றும் ESI பங்களிப்புத் தொகைகள், அந்தந்த ஒப்பந்ததாரர்களிடம் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், மின்வாரியத்திடமிருந்து தொகையைப் பெற்றுக்கொண்ட பின்னரும், பல ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் அந்தத் தொகையைச் செலுத்துவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இதனை தீவிரமாக கண்காணித்து வரும் மின்சார வாரியம், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்தத் தவறும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், எதிர்காலத்தில் மின்சார வாரியத்தின் எந்தவொரு ஒப்பந்தப் பணிகளிலும் பங்கேற்க முடியாத வகையில் முழுமையாகத் தடை செய்யப்படுவார்கள் எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் மற்றும் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு மின்சார வாரியம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் வாரிய அதிகாரிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b