சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கு ஆயுதங்கள் கிடையாது,பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பே முக்கிய நோக்கம் – ஐஜி பவானிஸ்வரி
சென்னை, 10 ஜூன் (ஹி.ச) தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற புதிய சிறப்பு காவல் அமைப்பை தொடங்கி வைத
Bhavani


சென்னை, 10 ஜூன் (ஹி.ச)

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற புதிய சிறப்பு காவல் அமைப்பை தொடங்கி வைத்தார்.

இந்தப் படையின் ஐஜியாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐஜி பவானிஸ்வரி,

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதன்மை நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாக தெரிவித்தார்.

பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் படையினர் செயல்படுவார்கள் என்றும், குற்றங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பான பகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கு தற்போது லத்தி உள்ளிட்ட எந்தவித ஆயுதங்களும் வழங்கப்படவில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை பிடித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பதே அவர்களின் முக்கிய பணி என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் ஒரு சிங்கப்பெண் அதிரடிப்படை குழு மட்டுமே செயல்படும் என்றும், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 70 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்காக ரூ.357 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்க விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

குறிப்பாக ஆன்லைன் மூலம் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், வரும் முன் காப்பது என்ற அணுகுமுறையிலேயே திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், இதற்காக முதல் கட்டமாக 49 ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பிங்க் பேட்ரோல் சேவையுடன் இணைந்து சிங்கப்பெண் அதிரடிப்படையும் செயல்படும் என்றும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு மூலம் படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்றும் ஐஜி பவானிஸ்வரி தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ