கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் தொடக்கம் - டெல்லி பேரணிக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்
கோவை, 10 ஜூன் (ஹி.ச.) கோவை வடகோவை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலக் குழு கூட்டம் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட
சிபிஐ


கோவை, 10 ஜூன் (ஹி.ச.)

கோவை வடகோவை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலக் குழு கூட்டம் இன்று தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தையொட்டி பேசிய மாநில செயலாளர் வீரபாண்டியன்,

மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளானோர் டெல்லி செல்ல உள்ள நிலையில், கோவையிலிருந்தும் அதிக அளவில் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி திருச்சியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயல்பாடுகள், எதிர்கால போராட்டத் திட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கூட்டத்தின் இறுதி நாளான நாளை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், அதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து விரிவாக அறிவிக்கப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam