குன்றத்தூர் அருகே தொழிற்சாலை கழிவுகள் சேமிப்பு குடோனில் தீ விபத்து
செங்கல்பட்டு, 10 ஜூன் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இந்த குடோனில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு கழிவுகள் உள்ளிட்ட
Godown Fire


செங்கல்பட்டு, 10 ஜூன் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இந்த குடோனில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று திடீரென குடோனில் தீப்பிடித்தது.

தீ மளமளவென பரவியதால் குடோனில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருந்ததால் கரும்புகை வானத்தை மூடியதுடன், அப்பகுதி முழுவதும் புகை பரவியது.

இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் அச்சமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பல வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீ வேகமாக பரவியதால் அதை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தீ மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரியக்கூடிய பொருட்கள் காரணமாக தீயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீ ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் திருமுடிவாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN