Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 10 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தின் முக்கிய லாரி போக்குவரத்து மையமாக விளங்கும் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தன்ராஜ் தலைமையேற்றார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த சில மாதங்களாக டீசல் விலை, உதிரிபாகங்களின் விலை, பராமரிப்பு செலவுகள் மற்றும் தொழிலாளர் சம்பளங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக லாரி தொழிலை நடத்துவது மிகவும் சிரமமாகி இருப்பதாகவும் கூறினார்.
இந்த சூழ்நிலையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 15, 2026 முதல் மாநிலம் முழுவதும் சரக்கு லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இந்த கட்டண உயர்வு அனைத்து வகை சரக்கு போக்குவரத்துக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வாகனங்களில் கட்டாயமாக ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்த வேண்டும் என்ற திட்டம் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் மற்றும் அதன் பராமரிப்பு செலவுகள் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அந்த திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜிபிஎஸ் கருவி கட்டாயப்படுத்தப்படுவதால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான லாரி உரிமையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கூடுதல் செலவுகளை ஏற்க முடியாத நிலை இருப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேபோல், சாலைகளில் அதிக பாரம் ஏற்றி இயக்கப்படும் லாரிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி அதிக சுமையுடன் இயக்கப்படும் வாகனங்கள் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், சட்டப்படி செயல்படும் லாரி உரிமையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை போக்குவரத்து மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அரசை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள் மற்றும் புதிய விதிமுறைகள் காரணமாக போக்குவரத்து துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதற்கான தீர்வுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN