பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர்
மதுரை, 10 ஜூன் (ஹி.ச) மதுரை பசுமலை பகுதியில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து
Manickam Tagore


மதுரை, 10 ஜூன் (ஹி.ச)

மதுரை பசுமலை பகுதியில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தின் முக்கிய சவால்களாக ஊழல் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவை இருப்பதாக குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், இந்த இரண்டு பிரச்சினைகளையும் மையமாக வைத்து தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாக கூறினார்.

குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் படை” முயற்சி வரவேற்கத்தக்கது என்றும், பெண்கள் நேரடியாக காவல் கண்காணிப்பு அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுவது முக்கியமான முன்னேற்றம் என்றும் தெரிவித்தார்.

புதிய ஆட்சி பொறுப்பேற்று குறுகிய காலமே ஆன நிலையில், பல ஆண்டுகளாக நிலவி வந்த நிர்வாக சிக்கல்களை சரிசெய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். அந்த அடிப்படையில் அரசின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

சிங்கப்பெண் படை அறிமுக நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோவில் எழுத்துப் பிழைகள் இருந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டத்தை அதன் அடிப்படை நோக்கத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்றார். சிறிய தொழில்நுட்ப குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி திட்டத்தின் முக்கியத்துவத்தை மறைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையில் சில சேனல்கள் ஒளிபரப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து பேசிய அவர், பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களில் ஒன்றாகும் என்றார். எந்த ஊடகத்திற்கும் அநீதி நடைபெறக்கூடாது என்றும், இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் அவை உரிய முறையில் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் மீது சில அரசியல் கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் ஆட்சியின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். மக்கள் அரசியல் சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொள்பவர்கள் என்றும், அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் புதிய முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த மாணிக்கம் தாகூர், தொழில் வளர்ச்சிக்கான முக்கிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். மாநிலத்தின் தொழில் கட்டமைப்பு வலுவாக இருப்பதால் முதலீடுகள் குறித்த தவறான தகவல்கள் மக்களிடம் எடுபடாது என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய தலைவர் செல்வப் பெருந்தகை தனது பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எதிர்கால முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியா கூட்டணி தொடர்பாக பேசிய அவர், அந்த கூட்டணி பாஜக மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் தளமாக உருவாக்கப்பட்டதாக விளக்கினார். நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட பல்வேறு கட்சிகள் இதில் இணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் புதிய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சில பகுதிகளில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

அரசியல் நோக்கங்களுக்காக மக்களை சிரமப்படுத்தும் செயல்கள் யாருக்கும் பயனளிக்காது என்றும், உண்மை நிலை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN