சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை ரிப்பன்
Raj


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற வழிகாட்டிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை மேயர் மகேஷ் குமார்,

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார்.

அதேசமயம், கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பதாகக் கூறி, அதை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1,322 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேயர் பிரியா தனது உரையில்,

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தற்போது மாணவர்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாகக் கூறினார். மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் “கனவு காணுங்கள், கனவு மெய்ப்படும்” என்ற வாசகத்தை நினைவுகூர்ந்த அவர், மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து உயர்கல்வி பயில வேண்டும் என்றும், அறிவுத் திறனை வளர்க்க அதிக புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமானது என்றும், அது சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் என்றும் கூறினார்.

கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜமோகன்,

பொதுத்தேர்வில் வெற்றி பெற்று உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டினார். மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும், உலகிலேயே சிறந்த நண்பர்கள் ஆசிரியர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறப்பாகப் படிக்கும் மாணவர்களை மட்டுமல்லாமல், கல்வியை மெதுவாகக் கற்கும் மாணவர்களையும் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நானும் பள்ளிக் காலத்தில் மெதுவாகப் படித்த மாணவர்களில் ஒருவன். ஆனால் தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார்.

அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சி என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இறுதியாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ