என்னுயிர் அப்பா பாரதிராஜா மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – சீமான் இரங்கல்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது திரையோவியங்களின் மூலம் காலத்த
Se


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தனது திரையோவியங்களின் மூலம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிலைத்திருக்கும் படைப்புகளை வழங்கிய மகத்தான கலைஞர் பாரதிராஜா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழர் வாழ்வியலையும், பண்பாட்டையும் கவிதைபோல் திரையில் பதிவு செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாரதிராஜாவை “என்னுயிர் அப்பா” என குறிப்பிட்டுள்ள சீமான், திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் தனக்கு கற்றுக்கொடுத்த பேராசான் என்றும், பெற்ற மகனைப் போல தன் மீது பேரன்பு காட்டியவர் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாட்கள் தனது வாழ்வின் பொன்னான காலகட்டம் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு ஏராளமான திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி வாழ்வளித்த மகாகலைஞரின் மறைவு கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தனது அரசியல் பயணத்திற்கும் பாரதிராஜா ஆதரவாக இருந்ததாகவும், நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி வாழ்த்திய அவரது மறைவு தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்” என்று சீமான் தனது இரங்கல் செய்தியில் உருக்கமாக கூறியுள்ளார்.

இறுதியாக, பாரதிராஜாவை இழந்து வாடும் குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, இயக்குநர் இமயத்திற்கு தனது புகழ் வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ