Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 10 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரபலமான மணிமுத்தாறு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 6-வது நாளாகவும் குளிக்க தடை அமலில் உள்ளது.
மேலும், தொடர் மழையால் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,191.92 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.அ
ணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், அருவியின் வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு ரசிப்பதற்கு மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam