இயக்குநர் பாரதிராஜா மறைவு - தயாரிப்பாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று கொண்டாடப்பட்ட மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு தமிழ் திரையுலகில்
இயக்குநர் பாரதிராஜா மறைவு - தயாரிப்பாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று கொண்டாடப்பட்ட மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

அவருக்கு வயது 84.

அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

1977-ஆம் ஆண்டு ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, ஸ்டூடியோவுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்தின் மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’, ‘வேதம் புதிது’ என 44-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைத்தார். ராதிகா, ராதா, ரேவதி, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது ஒரே மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அவரை மனதளவில் பெரிதும் பாதித்தது. சிகிச்சைக்குப் பின் வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாரதிராஜாவின் மறைவு ஒரு இயக்குநரின் மறைவு மட்டுமல்ல; தமிழ் திரைப்பட உலகின் ஒரு பொற்காலத்தின் முடிவு என திரையுலகினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் சரத்குமார், குஷ்பு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட பல தேசிய, மாநில விருதுகள் வழங்கி மத்திய, மாநில அரசுகள் கவுரவித்துள்ளன.

அவரது படைப்புகள் தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் என தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b