Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஜூன் (ஹி.ச)
மின்தடை, மின்மாற்றி செயலிழப்பு, கேபிள் பழுது உள்ளிட்ட முக்கிய மின் கோளாறுகள் தொடர்பான தகவல்களை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நுகர்வோருக்கு சரியான தகவல்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
மின் கோளாறுகள் குறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியான பிறகோ அல்லது பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தகவல் கிடைத்த பிறகோ மட்டுமே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது ஏற்க முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, கோளாறுக்கான காரணம், பழுது நீக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மின் விநியோகம் சீராகும் காலம் உள்ளிட்ட விவரங்களை முறையாக பகிர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பழுது நீக்கும் பணிகள் மற்றும் மின் விநியோகம் மீட்கப்பட்ட நிலை தொடர்பான புகைப்படங்கள், கள அறிக்கைகள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் மின் தேவை அதிகரிக்கும் சூழலில், மழைக்காலங்களில் கடைப்பிடிக்கப்படும் அதே அளவிலான விழிப்புணர்வு மற்றும் துரித நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய மின்தடைகள் மற்றும் கோளாறுகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதால், மாற்று மின் விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படை கோளாறை 24 மணி நேரமும் தொடர்ந்து சரிசெய்து, நிரந்தரமாக மின் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ