ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.40 கோடி ஏலச்சீட்டு மோசடி - பாதிக்கப்பட்டோர் சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூர் , 10 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.40 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி இருநூறுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று சாலையில் அ
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.40 கோடி ஏலச்சீட்டு மோசடி - பாதிக்கப்பட்டோர் சாலை மறியல்


ஸ்ரீவில்லிபுத்தூர் , 10 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.40 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி இருநூறுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்த காளீஸ்வரி என்ற பெண்மணி, அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சேர்ந்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டுகளாக சீட்டு கட்டி வந்த ஏராளமான குடும்பங்கள், முதிர்வு தொகை கேட்டபோது பணம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

திடீரென தொடர்பை துண்டித்துக்கொண்டு தலைமறைவானதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால், மோசடி செய்தவர்கள் மீது இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் முக்கிய சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் பறிபோய்விட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த மோசடி சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏலச்சீட்டு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் உணர்த்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b