Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
மத்தியப் பிரதேச மாநில ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான மீனாட்சி நடராஜன் அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
வேட்புமனு நிராகரிப்பு அற்பமான மற்றும் ஆதாரமற்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அரசியல் சதி என்றும், ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமையையும், பிரதான எதிர்க்கட்சியின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பறிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்தின் சாதாரண நோட்டீஸை ஒரு பெரிய குற்றவியல் வழக்காக சித்தரித்து வேட்புமனுவை நிராகரித்திருப்பது சட்ட விரோதமான செயல் என்றும், தேர்தல் ஆணைய விதிகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சி வேட்பாளர்களை தேர்தல் களத்திலிருந்து நீக்க முயற்சிப்பதாக பாஜக மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளை மீறும் இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் அனைத்து அரசியல் மற்றும் சமூக சக்திகளும் இந்த வேட்புமனு நிராகரிப்பை ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ