Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24×7 மற்றும் ஜனம் தமிழ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு கேபிள் நிறுவனத்திற்கும் செட்டாப் பாக்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான நிலுவைத் தொகைப் பிரச்சினையே இதற்குக் காரணம் என கூறப்பட்டாலும், ஏன் இந்த மூன்று சேனல்கள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள், நிர்வாகக் குறைபாடுகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த ஊடகங்களே தற்போது ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சனநாயகத்தில் விமர்சனங்களைக் கேட்கும் மனப்பக்குவமும், ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும் என்றும், அரசை விமர்சிக்கிறது என்பதற்காக ஊடகங்களை ஒதுக்குவது அல்லது மறைமுக அழுத்தங்களுக்கு உள்ளாக்குவது சனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.
செய்திகளைத் தடை செய்வதன் மூலம் உண்மைகளை மறைக்க முடியாது என்றும், மக்களின் குரலையும் ஊடகங்களின் உரிமையையும் முடக்குவது எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24×7 மற்றும் ஜனம் தமிழ் ஆகிய சேனல்களை உடனடியாக மீண்டும் ஒளிபரப்பில் இணைக்க தமிழக அரசும், அரசு கேபிள் நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ