ஈரான் மீதான அமெரிக்க பதிலடி தாக்குதல் - ஹார்மூஸ் நீரிணையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதால் பதற்றம்
ஈரான் , 10 ஜூன் (ஹி.ச.) இரண்டு மாதங்களுக்கு முன் பிப்ரவரி 28-ல் அமெரிக்கா-இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராண
ஈரான் மீதான அமெரிக்க பதிலடி தாக்குதல் - ஹார்மூஸ் நீரிணையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதால் பதற்றம்


ஈரான் , 10 ஜூன் (ஹி.ச.)

இரண்டு மாதங்களுக்கு முன் பிப்ரவரி 28-ல் அமெரிக்கா-இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறி, அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையி, நேற்று இரவு ஹார்மூஸ் நீரிணைக்கு மேல் ரோந்து சென்ற எங்களின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார். இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்த காயமும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) நேற்று மாலை 5 மணிக்கு ஈரான் மீது தற்காப்பு தாக்குதல்களை தொடங்கியது. இது நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்புக்கு விகிதாசாரமான பதில் என அமெரிக்க ராணுவம் விளக்கம் அளித்தது.

ஹார்மூஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக CENTCOM தெரிவித்தது. பதில் மிக வலுவாக, மிக சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அதுதான் இந்த தாக்குதல்” என ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஈரானின் அரசு ஊடகங்களின்படி, ஹார்மூஸ் நீரிணையில் உள்ள கேஷ்ம் தீவு, சிரிக் துறைமுக நகரம், பந்தர் அப்பாஸ் மற்றும் ஜாஸ்க் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படையை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்தது. பகைமை தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதில்கள் இருக்கும் எனவும் எச்சரித்தது.

ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு நேரடியாக பொறுப்பேற்க மறுத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில்,

எங்கள் பிரதேசத்திற்கு அருகில் உள்ள வெளிநாட்டுப் படைகள் மனித தவறுகள், விபத்துகள் அல்லது குறுக்கு துப்பாக்கிச் சூட்டில் சிக்கும் அபாயத்தில் எப்போதும் உள்ளன. ஆபத்தை குறைக்க சிறந்த தீர்வு அவர்கள் வெளியேறுவதுதான். நாங்கள் ராஜதந்திர மொழியை விரும்புகிறோம், ஆனால் மற்ற மொழிகளையும் பேசுவோம் என்றார். மேலும், எங்களை தாக்கினால் பதிலடி கொடுப்போம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எச்சரித்தார்.

அமெரிக்க அதிகாரி ஒருவர், ஹெலிகாப்டர் ஈரானிய ட்ரோனுடன் மோதியதால் விழுந்ததாகவும், ஈரான் வேண்டுமென்றே சுட்டு வீழ்த்தியதா என்பது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் இருந்து இரண்டு விமானிகளையும் அமெரிக்க கடற்படையின் ஆளில்லா படகு மூலம் சுமார் இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்டனர். இது அமெரிக்க ராணுவத்தின் முதல் கடல் ட்ரோன் மீட்பு நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% உயர்ந்தது.

அமெரிக்க தாக்குதல் நேற்று இரவு 9 மணிக்கு நிறைவடைந்ததாக CENTCOM அறிவித்தது.

Hindusthan Samachar / vidya.b