Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.
இந்தப் புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் 125 நாள் வேலைத் திட்டத்திற்கான நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டுக்கான முன்பணம் ஆகியவை சேர்த்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 7,957 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் போலவே, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளைப் புனரமைத்தல் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுவிக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் தமிழ்நாட்டில் பணித்தள பொறுப்பாளர்களுக்கான ஊதிய நிலுவை உடனடியாக வழங்கப்படும் எனவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நிதி நிலுவையால் பணிகள் தாமதமான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த தொகை கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b