Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி வசதிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உடற்கல்வி பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கவும், 297 உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பணியிடங்களை புதிதாகத் தோற்றுவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் வழிகாட்டுதலின்படியும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படியும், அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கு முன்பே இதற்கான அரசாணையை வெளியிடுவதற்கான சுற்றாணைக் குறிப்பில் கையெழுத்திடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாணையின் மூலம் மாநிலம் முழுவதும் புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பணியிடங்களும் என மொத்தம் 1,625 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த பல அரசுப் பள்ளிகள் பயனடையும் என்றும், மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்திறன் சார்ந்த பயிற்சிகள் முறையாக வழங்கப்பட வழிவகை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி என்பது வகுப்பறைக்குள் நடைபெறும் கற்றலோடு மட்டுப்பட்டது அல்ல.
விளையாட்டு மைதானங்களும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முக்கிய கற்றல் தளங்களாகும் என்பதை வலியுறுத்திய அன்பில் மகேஷ், “மைதானமும் ஒரு வகுப்பறைதான்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்த புதிய பணியிடங்கள் மூலம் மாணவர்களின் உடற்திறன், விளையாட்டு ஆர்வம், குழு ஒருங்கிணைப்பு திறன் மற்றும் போட்டித் திறன்களை வளர்த்தெடுக்க தேவையான வழிகாட்டுதலை உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்குவார்கள் என்றும், பள்ளி மட்டத்திலிருந்து மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முயற்சிக்கு இது முக்கிய பங்களிப்பாக அமையும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ