Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
உழைத்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 10 நாட்களுக்கு மேலாகியும் ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்றும், இதனால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாகத் தெரிவித்த அவர், காரணம் எதுவாக இருந்தாலும் உழைத்த பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி வைப்பதோ அல்லது வழங்க மறுப்பதோ நியாயமல்ல; அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சாடியுள்ளார்.
மேலும், மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் மாநகராட்சியும் அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ