Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 11 ஜூன் (ஹி.ச)
1985-ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாதுகாப்பை மேம்படுத்த இந்திய-வங்கதேச எல்லையின் பெரும்பகுதியில் வேலி அமைக்கப்பட்டது.
ஆனால், புவியியல் மற்றும் நிர்வாக சிக்கல்களால் போக்தங்கா, ஃபெஸ்கர்குட்டி கிராமங்கள் வேலிக்கு வெளியே விடப்பட்டன.
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் எல்லை தாண்டி தீவிரவாத அமைப்புகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கவலைகள் சமீபத்தில் மேலும் அதிகரித்துள்ளன.
எல்லைத் தூண்கள் 1021 மற்றும் 1022-க்கு இடையே அமைந்துள்ள இந்த கிராமங்கள், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் துப்ரி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன.
மொத்தம் சுமார் 662 பிகா பரப்பளவு கொண்ட இந்த கிராமங்களில், 90 சதவீதத்தினர் கோச்-ராஜ்பொங்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
குரிகிராம் மாவட்டத்தில் உள்ள வங்கதேச குடியிருப்புகளால் சூழப்பட்ட இந்த கிராமங்களுக்கு, எல்லை வேலியில் உள்ள சிறப்பு வாயில் எண் 50 மட்டுமே இந்திய நிலப்பரப்பை அடைய ஒரே வழி. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த வாயில், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) பாதுகாக்கப்படுகிறது. கடந்து செல்ல கிராம மக்கள் அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பின் வாயில் மூடப்பட்டதும், கிராம மக்கள் இந்தியாவிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படுகின்றனர். மருத்துவ அவசர நிலைகளில் BSF வாயிலைத் திறந்தாலும், இந்தத் தனிமை அன்றாட சவாலாகவே உள்ளது.
வாயில் எண் 50-க்கு அப்பால், குறுகிய மண் சாலை போக்தங்கா வழியாக ஃபெஸ்கர்குட்டிக்கு செல்கிறது.
கால்டியோ ஆற்றின் மீதுள்ள சிறிய பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். கோலகஞ்ச் நகரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் மட்டுமே இருந்தாலும், அமைவிடம் காரணமாக கிராமங்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
கிராமங்களில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வங்கதேச எல்லைக் காவல் படையின் கண்காணிப்பு நிலை மற்றும் வங்கதேச குடியிருப்புகள் உள்ளன.
ஆனால், போக்தங்கா அல்லது ஃபெஸ்கர்குட்டியில் நிரந்தர BSF முகாம் இல்லை. சட்டவிரோத ஊடுருவல், திருட்டு மற்றும் எல்லை தொடர்பான பிற பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கிராம மக்கள் அடிக்கடி கவலை தெரிவிக்கின்றனர்.
கடுமையான இன்னல்களுக்கு மத்தியிலும், இந்திய குடிமக்களாக தங்கள் ஜனநாயக உரிமைகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அடுத்தடுத்த அரசுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களிடையே கோபம் நிலவுகிறது.
கிராம மக்களைப் பொறுத்தவரை, இது வெறும் எல்லைப் பிரச்சினை அல்ல. தங்கள் நாட்டுடன் தொடர்பில் இருக்கப் போராடும் இந்திய குடிமக்களின் அன்றாடப் போராட்டம் இது.
இந்த நிலையில் அசாம் அமைச்சரும், துப்ரி மாவட்டத்தின் புதிய பொறுப்பு அமைச்சருமான அசோக் சிங்கால், இன்று போக்தங்கா கிராமத்திற்கு வருகை தர உள்ளார்.
இன்று மதியம் 3 மணியளவில் அமைச்சர் அசோக் சிங்கால் வருகை தரவுள்ள நிலையில், எல்லை வேலிக்கு அப்பால் புறக்கணிக்கப்பட்ட இந்த இரு இந்திய கிராமங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b