Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 11 ஜூன் (ஹி.ச)
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கயிறு கட்டி ஆட்டோக்களை இழுத்துச் சென்று வினோதமான முறையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் முக்கிய வீதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக கயிறு கட்டப்பட்டு, ஓட்டுநர்களால் இழுத்துச் செல்லப்பட்டன.
எரிபொருள் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் வருமானம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.
பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. சிலிண்டர் விலையும் கைக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்த முடியாத நிலை. எரிபொருள் இல்லாமல் ஆட்டோவை இழுத்துச் செல்வதைப் போலவே எங்கள் வாழ்க்கையும் ஆகிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும், ஆட்டோ தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த வினோத போராட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
Hindusthan Samachar / vidya.b