21 வயதுக்கு கீழ் மது விற்பனைக்கு தடை - மதுவிலக்கு துறையின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை, 11 ஜூன் (ஹி.ச) தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லாத, முழுமையான ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்குவதில் மாநில அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுபான விற்பனை த
21 வயதுக்கு கீழ் மது விற்பனைக்கு தடை - மதுவிலக்கு துறையின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு


சென்னை, 11 ஜூன் (ஹி.ச)

தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லாத, முழுமையான ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்குவதில் மாநில அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மதுபான விற்பனை தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி, அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கும் புதிய அறிவுறுத்தல்களை அத்துறை வெளியிட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி, மாநிலத்தில் 21 வயது நிரம்பாத எந்தவொரு நபருக்கும் மதுபானம் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறும் கடைகள் மற்றும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருபவர்களின் வயது குறித்து சந்தேகம் எழுந்தால், அவர்களின் வயதை உறுதிப்படுத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் எனவும், உரிய சான்று இல்லாத பட்சத்தில் மதுபானம் வழங்கக் கூடாது எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், FL2 உரிமம் பெற்று இயங்கும் அனைத்து கிளப்புகளும் தங்களது உறுப்பினர்களுக்கு முறையான அடையாள அட்டைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அந்த கிளப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் விதிகளின்படி தகுதி பெற்ற விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் பரிமாறப்பட வேண்டும் என்றும், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை என்றும் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இதனுடன், FL2 மற்றும் FL3 உரிமங்களின் கீழ் செயல்படும் பார்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்பனை நேரத்தை எவ்வித விதிவிலக்கும் இன்றி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் மதுவிலக்கு துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதியும், இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b