நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தொடரும் தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
திருநெல்வேலி, 11 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை எட்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுத
Ban on bathing at Manimutharu Falls continues


திருநெல்வேலி, 11 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை எட்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தடை விதித்தனர்.

தடை விதிக்கப்பட்டதிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அருவிப் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பு வேலிகள் அமைத்து யாரும் அருவிக்குள் இறங்காதவாறு தடுத்து வருகின்றனர்.

நீர்வரத்து சீரான பிறகும், வெள்ளத்தின் வேகம் குறைந்து பாதுகாப்பான நிலை உருவான பிறகும் மட்டுமே மீண்டும் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் அருவியின் அழகை மட்டுமே தொலைவில் இருந்து ரசிக்க முடியும் என்பதால், விடுமுறையைக் கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மழைக்காலம் முடிந்து நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதும் தடை விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b