அரசு மதுபானக் கடையில் மோதல் - அரிவாள் வெட்டில் 4 பேர் படுகாயம்
திருத்துறைப்பூண்டி , 11 ஜூன் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மோதலாக மாறியதில், நான்கு பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும
அரசு மதுபானக் கடையில்  மோதல் - அரிவாள் வெட்டில் 4 பேர் படுகாயம்


திருத்துறைப்பூண்டி , 11 ஜூன் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மோதலாக மாறியதில், நான்கு பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டதாக எழுந்த தகராறு, சில நிமிடங்களில் வன்முறையாக வெடித்தது.

ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எதிர்த்தரப்பைச் சேர்ந்த நான்கு பேரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார், படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் கூறுகையில், நால்வரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மோதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானக் கடை முன்பு நடைபெற்ற இந்த வெட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b