ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார் விவகாரம் - முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி?
தமிழ்நாடு, 11 ஜூன் (ஹி.ச.) ஸ்ரீவைகுண்டத்தில் பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வ
உதயநிதி


தமிழ்நாடு, 11 ஜூன் (ஹி.ச.)

ஸ்ரீவைகுண்டத்தில் பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி த.வெ.க. நிர்வாகிகள் இருவர் தன்னை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து புகார் அளித்தபோது, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சமரசம் பேச முயன்றதாகவும், அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருவதாக கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோல், மேலும் ஒரு பெண்ணும் இதேபோன்ற பாதிப்புக்கு உள்ளானதாகவும், இந்த விவகாரம் கட்சியின் மேலிடத்திற்கு தெரிந்திருந்ததாக குற்றவாளிகள் கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாதுகாக்க முயற்சி செய்யப்பட்டதோடு, புகார் அளித்த பெண்ணையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை இருப்பதாக கூறும் முதலமைச்சர் விஜய், இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் எம்.எல்.ஏ. சரவணனை பதவியில் இருந்து நீக்குவதுடன், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam