Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த காரணத்திற்காக அபிசெல்வி என்ற இளம் பெண் அவரது குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
கொலையை மறைப்பதற்காக அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி, உடலை அவசரமாக இறுதிச் சடங்கு செய்ய முயன்ற குடும்பத்தினரின் செயல், சாதி வெறியின் கொடூர வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையின் துரித விசாரணையால் உண்மை வெளிச்சத்துக்கு வந்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவப் படுகொலைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற கேள்வி எழுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்றும், இதுபோன்ற ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தமிழகத்தில் தனிச் சிறப்புச் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுச் சமூகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பிரிவுகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும், சாதி மறுப்புக் காதல் மற்றும் திருமணங்களை சமூக ரீதியாக ஆதரித்து பாதுகாப்பதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும் என்றும் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ