Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 ஜூன் (ஹி.ச)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம் பூத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனது மகன் போலீஸாரால் சுடப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகன் மணிகண்டன், பதநீர் இறக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஏப்.7-ல் ஆலங்குளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சில போலீஸார் சீருடை அணியாமல் எங்கள் வீட்டிற்கு வந்து மணிகண்டனை உடன் அழைத்துச் சென்று, பனை மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா எனப் பார்க்க கூறியுள்ளனர்.
மணிகண்டன் மரம் ஏறும் போது சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார். இதனை அங்க நின்றிருந்த நான் மற்றும் எனது பேத்தி ஆகியோர் தட்டிக்கேட்டோம்.
எங்களை போலீஸார் மிரட்டினர். மணிகண்டன் மரத்தில் இறங்கி வந்த போது அவரை சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டனின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளூர் போலீஸார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே என் மகன் போலீஸாரால் சுடப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றவும், அதுவரை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவசாயி மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b