Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 11 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் மூன்று பெரிய அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வெளியாகியுள்ளது.
தொடர் மழை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் சாரல் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மொத்தம் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 72.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மை அணையான பாபநாசம் அணையின் மொத்த உயரம் 143 அடியாகும். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.40 அடியாக பதிவாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழையால் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி வீதம் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதேசமயம், குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 404 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து வெளியேற்றத்தை விட அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
மொத்தம் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107.64 அடியாக உள்ளது. தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்தும் இல்லை, அணையிலிருந்து நீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் நீர் இருப்பு நிலையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மூன்று அணைகளின் நீர்மட்டமும் மேலும் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைகளின் நீர்மட்ட உயர்வால் மாவட்டத்தின் குடிநீர் தேவை மற்றும் பாசனப் பகுதிகளுக்கு போதிய நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b