Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 11 ஜூன் (ஹி.ச)
இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் நேற்று (ஜூன் 10) காலை காலமானார்.
அவருக்கு வயது 84. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேரில் ஆய்வு செய்தார்.
முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
நல்லடக்கம் நடைபெறும் பண்ணை வளாகம், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வழித்தடங்கள், வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் குழு விரிவாக ஆலோசித்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b