Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 11 ஜூன் (ஹி.ச.)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில், மும்முனை மின்சார தட்டுப்பாட்டால் குறுவை நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலி கருப்பூர், குறிச்சி, தாதம்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குறுவை நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தா.பழூர் கடைவீதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P