ஆடுகளை மேய்க்கவில்லை என 15 வயது சிறுவன் அடித்துக் கொலை - 2 பேர் கைது
திருவள்ளூர், 11 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில், 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது தாய் மற்றும் இரு சகோதரர்கள் பல மாதங்களாக பண்ணையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக
கைது


திருவள்ளூர், 11 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில், 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது தாய் மற்றும் இரு சகோதரர்கள் பல மாதங்களாக பண்ணையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் (48) என்பவர் குத்தகை நிலத்தில் ஆடு மற்றும் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.

இந்தப் பண்ணையில் வேலை செய்வதற்காக திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த வினோத், அவரது அக்கா வெண்ணிலா மற்றும் அவரது மூன்று மகன்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15) ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, ஆடுகளை சரியாக மேய்க்கவில்லை என்ற காரணத்தால் பண்ணை உரிமையாளர் முருகன் சிறுவனை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க வினோத்தின் உதவியுடன் சிறுவனின் உடலை பண்ணை அருகே புதைத்து, அந்த இடத்தில் சிமெண்ட் பூசி மறைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருக்க வெண்ணிலா மற்றும் அவரது மற்ற இரு மகன்களையும் பண்ணையில் அடைத்து வைத்து பல மாதங்களாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பண்ணையில் இருந்து தப்பித்த வெண்ணிலா, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோழிப் பண்ணை அருகே புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது தாய் மற்றும் இரு சிறுவர்கள் பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் இந்த சம்பவம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam