ஏர் இந்தியா AI-171 விமான விபத்து – டிஜிபி மாலிக் பகிர்ந்த அதிர்ச்சி நினைவுகள்
அகமதாபாத், 11 ஜூன் (ஹி.ச.) கடந்த ஆண்டு நடந்த பயங்கரமான ஏர் இந்தியா AI-171 விமான விபத்தின் மீட்பு நடவடிக்கைகளை குஜராத் டிஜிபி ஜி. எஸ். மாலிக் நினைவு கூர்ந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் வ
A


அகமதாபாத், 11 ஜூன் (ஹி.ச.)

கடந்த ஆண்டு நடந்த பயங்கரமான ஏர் இந்தியா AI-171 விமான விபத்தின் மீட்பு நடவடிக்கைகளை குஜராத் டிஜிபி ஜி. எஸ். மாலிக் நினைவு கூர்ந்துள்ளார்.

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களில் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உட்பட, தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

விபத்து நடந்த இடம் தனது இல்லத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்ததாக தெரிவித்த டிஜிபி மாலிக், தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றதாக கூறினார்.

அங்கு தீயின் வெப்பம் சுமார் 1500 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததாகவும், மீட்பு பணிகள் மிகுந்த சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவசர சேவைகள் விரைந்து செல்ல “கிரீன் காரிடார்” ஏற்படுத்தப்பட்டதாகவும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சில வாரங்களுக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்ச்கள் “கட் ஆஃப்” நிலைக்கு மாறியதே விபத்துக்கான ஆரம்ப காரணமாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டாலும், இதுகுறித்து முழுமையான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய துயர சம்பவங்களில் ஒன்றாகும்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA