ஹரியானாவில் ஜிம் உரிமையாளர் சுட்டுக்கொலை - பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல்
ஹரியானா, 11 ஜூன் (ஹி.ச.) ஹரியானா மாநிலம் ஹான்சியில் உள்ள ஃபவ்வாரா சௌக் அருகே இன்று (ஜூன் 11) காலை பைக் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜிம் உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு இளம்பெண் கா
ஹரியானாவில்  ஜிம் உரிமையாளர் சுட்டுக்கொலை - பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல்


ஹரியானா, 11 ஜூன் (ஹி.ச.)

ஹரியானா மாநிலம் ஹான்சியில் உள்ள ஃபவ்வாரா சௌக் அருகே இன்று (ஜூன் 11) காலை பைக் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜிம் உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு இளம்பெண் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இன்று காலை சுமார் 5:30 மணியளவில் ஃபவ்வாரா சௌக் பகுதியில் கடைகள் அமைந்துள்ள சாய்தளத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஜிம் உரிமையாளர் உடற்பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து பகுதியை சுற்றி வளைத்தனர். மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணைக்கு உதவ குற்றப் புலனாய்வு பிரிவு (CIA) மற்றும் தடயவியல் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தடயங்களை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,

ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த குற்றவாளிகள், அருகில் இருந்து சுமார் 10 முறை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

ஜிம் உரிமையாளரின் முதுகு மற்றும் தலையில் குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஷிகா என்ற இளம்பெண் மீது குண்டு சிதறல்கள் பட்டு காயமடைந்தார். அவர் ஹிசாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினர்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b