Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம்
கயத்தாறு தாலுகா தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், ஜாதி வேறுபாடு காரணமாக அபிசெல்வியின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சிவஞானம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அபிசெல்வி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியும் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிசெல்வி தனது காதலருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை கண்ட சிவஞானம், அவரை கண்டித்ததுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருந்த ரசாயனப் பொருளை தண்ணீரில் கலந்து குடித்த அபிசெல்வி, பின்னர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீசார், அபிசெல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரம்பத்தில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் மற்றும் தாக்குதலுக்கான அடையாளங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து, கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் அனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அபிசெல்வியை அவரது சகோதரர் சிவஞானம் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அதற்கு அவரது தாய் எஸ்தர் பாலின் உடந்தையாக இருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சிவஞானம் மற்றும் எஸ்தர் பாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஜாதி வேறுபாட்டை காரணமாகக் கொண்டு காதல் தொடர்பை கைவிட மறுத்த இளம்பெண் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam