கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு - காவல் ஆய்வாளர் உட்பட 10 பேருக்கு சிபிஐ சம்மன்
கரூர், 11 ஜூன் (ஹி.ச.) கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சில காவலர்கள் மட்டும் இன்று விசாரணைக்க
கரூர் சம்பவம்


கரூர், 11 ஜூன் (ஹி.ச.)

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சில காவலர்கள் மட்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காவல்துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் விசாரணை நடவடிக்கைகள் மந்தமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதில் காவல் ஆய்வாளர் சையது அலி மற்றும் சில காவலர்கள் மட்டும் இன்று தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

விசாரணையின்போது, காவல் ஆய்வாளரின் வாகனத்தில் இருந்த ஆவணங்களை காவலர் ஒருவர் அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், பின்னர் மீண்டும் வெளியே வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த கட்டமாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam