Enter your Email Address to subscribe to our newsletters

கோழிக்கோடு, 11 ஜூன் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது ஆணுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த நபர் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைத்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட பரிசோதனையில் நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மாதிரிகள் இறுதி உறுதிப்படுத்தலுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA