Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்றும் விரிவான ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தேர்தல் கள நிலவரம் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.
மொத்தம் 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவில், முதல் நாள் சந்திப்பில் பங்கேற்க இயலாத உறுப்பினர்கள் இன்று திமுக தலைவரை நேரில் சந்தித்து தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாகச் சென்று, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துகளைத் திரட்டியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குழுவினர் தெரிவித்தனர்.
கள ஆய்வின்போது கட்சித் தொண்டர்கள் முன்வைத்த முக்கிய கருத்துகள் மற்றும் ஆதங்கங்களை பரந்தாமன், தாயகம் கவி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
வாக்குச்சாவடி அளவிலான பிரச்சினைகள், தொகுதி நிர்வாகிகளின் செயல்பாடுகள், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பிரசார உத்திகளில் இருந்த குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தலைமை இந்தக் கள ஆய்வுக் குழுவை அமைத்திருந்தது.
குழுவினர் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், கட்சியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து தலைமை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே இறுதி அறிக்கை மீது ஸ்டாலின் முடிவெடுப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b