Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 ஜூன் (ஹி.ச)
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த வழக்கில், விசாரணையை முடிந்த வரை விரைவாக முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மானாமதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மானாமதுரையில் 2 தொழிலாளர்களை, வாளால் வெட்டிய வழக்கில் கைதாகி, கால் முறிவு ஏற்பட்டு, இளைஞர் ஆகாஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காவல் நிலையத்தில் போலீசார் துன்புறுத்தியதால் உயிரிழந்துள்ளார்.
எனவே இளைஞரின் குடும்பத்தினருக்கு எஸ்சி, எஸ்டி சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும். வல்லுநர் குழு கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை பிற விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கொலை வழக்கு எஸ்/எஸ்டி சட்டப்படி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கில், விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி ஒத்தி வைத்து இருந்தார்.
மேலும் நீதிபதி காவல்நிலைய மரண வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாகக் கீழ் கண்ட விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
(i) கைது மற்றும் தடுப்புக் காவலை நிர்வகிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
(ii) காவல் நடவடிக்கைகளின் போது, நீதித்துறை ஆய்வின் கட்டாயம்
(iii) காவல் நிலைய மரணம் தொடர்பான நிகழ்வுகளில் சட்டப்பூர்வ தேவைகள்
(iv) சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாகப் பாதுகாத்தல்.
(v) முறையான மருத்துவ - சட்ட ஆவணப்படுத்தல் மற்றும் பிரேதப் பரிசோதனை நெறிமுறைகள்
(vi) மருத்துவ - சட்டப் பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை முறை மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட பிற தடயவியல் நவீனமயமாக்க பட வேண்டும்.
இந்த வழக்கில், மானாமதுரை நீதித்துறை நடுவர் எம். அஃப்சல் பாத்திமாவின் உடனடித் தலையீட்டிற்கு இந்த நீதிமன்றம் தனது பாராட்டை பதிவு செய்கிறது. அவரது நீதிமன்றக் காவல் நடவடிக்கைகள், தற்போது புலனாய்வுப் பதிவின் ஒரு பகுதியாக உள்ள ஒரு முக்கியமான சமகால விவரத்தைப் பாதுகாக்க வழி வகுத்துள்ளன. நீதிமன்றக் காவல் கட்டத்தில் காட்டப்படும் நீதித்துறை உணர்திறன், காவலில் வைக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான மிகவும் பயனுள்ள நிறுவனப் பாதுகாப்பாக அமைகிறது.
தற்போது இந்த விசாரணையானது ஒரு துணை காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் சிபிசிஐடி-யால் நடத்தப்படுவதாலும், இந்த வழக்கில் பொருத்தமான தண்டனை விதிகளை உள்ளடக்கும் வகையில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு கருத்துக்களாலும் பாதிக்கப்படாமல், விசாரணை அதிகாரி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விசாரணையைத் தொடர இந்த நீதிமன்றம் அவருக்கு வாய்ப்பளிக்கிறது.
விசாரணை அதிகாரி, முடிந்தவரை விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN