ராணிப்பேட்டை அட்டை சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து
ராணிப்பேட்டை, 11 ஜூன் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் அட்டை சேமிப்பு மற்றும் மறுசுழற்சி கிடங்கில் இன்று மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய அட்டைகள் மற்றும் ரசாயன பெட்டிக
ராணிப்பேட்டை அட்டை சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து


ராணிப்பேட்டை, 11 ஜூன் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் அட்டை சேமிப்பு மற்றும் மறுசுழற்சி கிடங்கில் இன்று மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

எளிதில் தீப்பற்றக்கூடிய அட்டைகள் மற்றும் ரசாயன பெட்டிகள் அதிகளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பழைய அட்டைகள் மற்றும் ரசாயன பெட்டிகளை சேமித்து வைத்திருந்த இந்த தனியார் நிறுவனத்தில் தீ பற்றியதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ 50 லட்சம் மதிப்பிலான ஏராளமான அட்டைகள் மற்றும் ரசாயன பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதுவரை உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் மற்றும் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தீ விபத்துக்கான துல்லியமான காரணம் மற்றும் சேத மதிப்பீட்டைக் கண்டறிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழிற்சாலைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் ரசாயனங்களை சேமிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b