Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஜூன் (ஹி.ச.)
கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
2022–23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, 2025–26 ஆம் ஆண்டில் வெறும் ரூ.7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், புதிய VB-GRAM சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் ரூ.7,585 கோடியைப் பயன்படுத்த தமிழ்நாடு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5,056 கோடி பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதுவரை மாநில அரசு சுமார் ரூ.1,000 கோடி மட்டுமே பங்களித்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.4,000 கோடிக்கும் அதிகமான நிதிச் சுமை மாநிலத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு நாட்டிற்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், திரும்ப வழங்கப்பட வேண்டிய நிதி குறைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் மாநிலத்தின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதாகவும் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மொழிக் கொள்கை, கல்வி நிதி, வெள்ள நிவாரணம், தேசியத் திட்ட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு பாரபட்சத்தை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலும் அதே நிலை தொடர்வதாக கூறினார்.
மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் அளிக்கும் விளக்கங்களை விட, நிதி ஒதுக்கீட்டு புள்ளிவிவரங்களே உண்மையை வெளிப்படுத்துவதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது வளர்ச்சிக்கான அரசியலோ, கூட்டாட்சிக்கான அரசியலோ அல்ல, தமிழ்நாட்டை தண்டிக்கும் அரசியல் என விமர்சித்த அவர், மாநில உரிமைகளை பறிக்கும் அரசியலுக்கு எதிராக மக்கள் உரிய பதிலை அளிப்பார்கள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P