Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஜூன் (ஹி.ச.)
பிரதமராக தொடர்ந்து 4,399 நாட்கள் பதவி வகித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை பாராட்டத்தக்கது.
ஆனால், அவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துவிட்டார் என்று கூறுவது வரலாற்று ரீதியாக தவறானது என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
1947 முதல் 1952 வரை ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தை மறக்கவோ, வரலாற்றிலிருந்து நீக்கவோ முடியாது. பாஜக தனது வசதிக்கேற்ப கணக்கிடலாம்.
ஆனால், அந்தக் கூற்றை எந்த விளக்கமும் இன்றி ஊடகங்கள் வெளியிடுவது வியப்பளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனையை நாம் பாராட்ட வேண்டும்.
அதேபோல், பாரத ரத்னா ஜவஹர்லால் நேருவின் 17 ஆண்டுகால சாதனையையும் மதித்து போற்ற வேண்டும். 1947 முதல் 1952 வரையிலான காலகட்டத்தில் புதிதாக உருவான இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தி வளர்த்த பெருமை நேருவையே சாரும் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதவிக்கால சாதனை குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ப.சிதம்பரத்தின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam