Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 11 ஜூன் (ஹி.ச.)
நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலங்களின் நிதித் தேவைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசால் கூட்டப்படும் புதுடெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பது வழக்கம்.
தமிழக முதல்வர் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கூட்டத்தை தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அவசர பணிகள் காரணமாக முதல்வர் டெல்லி செல்லவில்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கூட்டணி கட்சியான பாஜகவுடன் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் புதிய சபாநாயகர் தேர்வு ஆகிய விவகாரங்களில் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த பின்னணியில்தான் முதல்வர் ரங்கசாமி கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதல்வர் நேரில் பங்கேற்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலை, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான அறிக்கை நிதி ஆயோக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மட்டத்தில் புதுச்சேரியின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வரின் இந்த முடிவு மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b