Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 11 ஜூன் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தலங்கை கிராம காலனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் பழைய சாராய வியாபாரியான ராஜா (55) என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 24 மணி நேரமும் நடமாடும் பகுதியில் இந்த விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண் ஒருவர் மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், வைரலாகும் காட்சிகள் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam