அரசு ஒப்பந்த முறைகேடு புகார் - 8 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 11 ஜூன் (ஹி.ச.) அரசுத் துறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உயர்நீதிமன்றம்


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)

அரசுத் துறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரப்பன் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பல்வேறு அரசுத் துறைகளின் உட்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் போலியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

கடந்த 2022 முதல் சென்னை சிஐடி நகர் மற்றும் முகப்பேர் வீட்டுவசதி வாரிய கட்டுமானப் பணிகள், எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார தூர்வாரும் பணி, தஞ்சாவூரில் 294 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பாசன மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள், நெல்வேலி மற்றும் மயிலாடுதுறையில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் முறைகேடாக வழங்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சீ ராக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ பதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் போலியான போட்டியாளர்களாக செயல்பட்டு டெண்டர்களைப் பெற்றதுடன், தகுதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட துணை ஒப்பந்ததாரர் அனுபவச் சான்றிதழ்களும் போலியானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த பதில்கள் மூலம் தெரியவந்ததாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.டி. ஜான்சன் ஆஜராகி, ஒப்பந்த முறைகேடுகளால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணை அவசியம் என்றும் வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், புகாரை விசாரிக்க பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் கடந்த மே 26-ஆம் தேதி விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும், அந்தக் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அமைத்த குழு 8 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P