3 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - பராமரிப்பு பணி காரணமாக பேரருவியில் மட்டும் தடை நீடிப்பு
தென்காசி, 11 ஜூன் (ஹி.ச.) தொடர் மழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த குற்றால அருவிகளில், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பராமரிப்பு பணிகள் நடற்று வருவதால் பேரருவியில் மட்டும் குளிக்க தடை நீட்டிக
குற்றாலம்


தென்காசி, 11 ஜூன் (ஹி.ச.)

தொடர் மழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த குற்றால அருவிகளில், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பராமரிப்பு பணிகள் நடற்று வருவதால் பேரருவியில் மட்டும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை மழை குறைந்து அருவிகளின் நீர்வரத்தும் சற்றுக் குறைந்ததைத் தொடர்ந்து, முதற்கட்டமாக பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் சிற்றருவி ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், குற்றாலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பேரருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேவேளையில், நீர்வரத்து நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam