கலப்பு திருமணம் செய்த இளம் பெண்ணை கொலை செய்ய முயற்சி - தாய்மாமன் கைது
திருப்பத்தூர், 11 ஜூன் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை, பாடநூர் அருகே கீழ்காடு மாஞ்சான் வட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி தேவேந்திரன், சித்ரா. இவர்களது மகள் அஞ்சலி (23) என்பவர் தருமபுரியில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்
Yelagiri


திருப்பத்தூர், 11 ஜூன் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை, பாடநூர் அருகே கீழ்காடு மாஞ்சான் வட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி தேவேந்திரன், சித்ரா. இவர்களது மகள் அஞ்சலி (23) என்பவர் தருமபுரியில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே கல்லூரியில் படித்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கேசவன் (23) என்பவரும் அஞ்சலியும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மனம் மாறிய அஞ்சலியின் தாய் சித்ரா, தனது மகள் மற்றும் பேரக் குழந்தையை ஏலகிரி மலை கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

அதனை பார்த்த சித்ராவின் அண்ணனான கிருஷ்ணன் என்பவர் ’எங்களுக்கு தெரியாமல், எங்களை கேட்காமல் எதற்காக உன் மகளை அழைத்து வந்தாய்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அஞ்சலியை கிருஷ்ணன் அடிக்க சென்ற நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து அஞ்சலியை சுட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது தொடர்பாக அஞ்சலி ஏலகிரி மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த கிருஷ்ணன், துப்பாக்கியை உடைத்து காட்டில் தூக்கி எரிந்து விட்டார்.

அதன் பிறகு ஏலகிரி மலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாரதி, கிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் துப்பாக்கி உடைத்து போடப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அதனை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணனை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN