அதிமுகவுடன் இணைப்பு தேவையில்லை ,தவெக திமுகவின் நீட்சியாக செயல்படுகிறது – டிடிவி தினகரன்
சென்னை, 11 ஜூன் (ஹி.ச.) சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அதிமுகவுடன் கட்சியை இணைக்கும் சூழல் தற்போது இல்லை என்று தெரிவித்தார். அம்மா மக்கள்
Pasumpon TTV Dhinakaran


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)

சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,

அதிமுகவுடன் கட்சியை இணைக்கும் சூழல் தற்போது இல்லை என்று தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகக் கூறிய அவர்,

அதற்கான அவசியம் எதுவும் இல்லை என்றும், கட்சியினரிடமிருந்தும் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதன் பிறகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கட்சி தனித்த அடையாளத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவித்த டி.டி.வி. தினகரன், அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே கூட்டணியில் இணைந்ததாக கூறினார்.

தமிழக வெற்றி கழக அரசின் ஒரு மாத செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வந்ததாக கூறிய தவெக, தற்போது திமுக ஆட்சியின் நீட்சியாகவே செயல்படுவது போல் தெரிகிறது என்று விமர்சித்தார்.

தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளில் திமுக எடுத்த நிலைப்பாட்டைப் போலவே தவெகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களை ஆதரவு பெற முயற்சித்த விதம், கூட்டணி அரசியல் மற்றும் ஆட்சி அமைத்த நடைமுறைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சில தொலைக்காட்சி சேனல்கள் முடக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், தவெக அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்றும் விமர்சித்தார்.

அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி. தினகரன்,

அண்ணாமலை என்னுடைய நண்பர். அவர் பாஜகவிலிருந்து விலகிச் சென்றது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ