Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 11 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதிய இருசக்கர வாகனம் வாங்கச் சென்ற நபர், விற்பனை நிலையத்தில் வாகனம் குறித்து பேசியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு செங்குறிச்சியில் உள்ள புதிய இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு வாகனம் வாங்கும் நோக்கில் சென்றுள்ளார்.
அப்போது விற்பனையாளருடன் மேஜையில் அமர்ந்து புதிய வாகனம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, நாற்காலியில் அமர்ந்தபடியே தலை சாய்ந்த நிலையில் காணப்பட்டார்.
இதனை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவருக்கு உதவ முயற்சி செய்தனர். எனினும், மூச்சுத்திணறல் ஏற்பட்ட சில நொடிகளிலேயே ராஜு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
புதிய இருசக்கர வாகனம் வாங்கும் ஆர்வத்தில் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒருவர், அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி, பார்ப்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam