Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜூன் (ஹி.ச)
தூத்துக்குடியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண், அவரது சகோதரர் மற்றும் தாயாரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், அதற்கு முன்பு நிகழ்ந்த சங்கர் மற்றும் கோகுல்ராஜ் கொலைகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய அந்தச் சம்பவங்களைப் போலவே, தற்போது மேலும் ஒரு ஆணவப் படுகொலை அரங்கேறியிருப்பது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதலித்ததற்காகவும், சாதி மறுப்புத் திருமணத்தைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் உயிர்களைப் பலி வாங்கும் இந்த மனநிலை சமூக நீதி மற்றும் மனிதநேயத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கி, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை முழுவீச்சில் செயல்படச் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ